Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 28 ஏப்ரல் (ஹி.ச.)
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 'மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்' இன்று காலை பக்தி பரவசத்துடன் இனிதே நிறைவேறியது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழாவின் 10-ம் நாளான இன்று (ஏப்ரல் 28), மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
அதிகாலை 4 மணியளவில் சுவாமியும் அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.
பின்னர் ஆடி வீதியில் உள்ள அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.
காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் அதிர திருக்கல்யாணச் சடங்குகள் நடைபெற்றன.
திருப்பரங்குன்றத்திலிருந்து பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க, மீனாட்சி அம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
திருக்கல்யாணம் முடிந்தவுடன், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது மாங்கல்யக் கயிறுகளைப் புதிதாக மாற்றிக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் வெற்றிலைப் பாக்கு வைத்து, விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, 1 லட்சம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சார்பில், மதுரையில் கடந்த 27 ஆண்டுகளாக ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, நிகழாண்டும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் திருக்கல்யாணத்துக்கு வரும் பக்தர்களுக்கு இன்று காலை 7 மணி முதல் விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
கோதுமை இனிப்பு, கல்கண்டு சாதம், வெண்பொங்கல், சாம்பார் சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் இந்த விருந்தில் அடங்கும்.
விருந்துக்குத் தேவையான காய்கறிகளை மாட்டுத்தாவணி சந்தை வியாபாரிகளும், அரிசியை பழமுதிர்ச்சோலை திருவருள் பக்த சபை அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்கள், மீனாட்சி அம்மன் பக்தர்களும் வழங்கியுள்ளனர்.
திருக்கல்யாணத்தையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுற்றுப் பகுதிகள், மாசி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானம், உணவு வகைகள் பிரசாதமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b