Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 28 ஏப்ரல் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளே அரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன். இவரின் மகன் சத்தியமூர்த்தி. வயது 40.
இவர் மனைவி, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளிட்டோருடன் அரவத்தூர் கிராமத்தில் வசித்து வந்தார்.
சத்தியமூர்த்திக்கு சொந்தமாக லாரி உள்ளது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது லாரியை சர்வீஸ் செய்ய ஷெட்டில் விட்டுவிட்டு அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் சத்தியமூர்த்திக்கு ஃபோன் செய்து, 'உன்னிடம் பேச வேண்டும், குறிப்பிட்ட இடத்திற்கு வா' என்று அழைத்ததாகவும், அந்த இடத்திற்கு சத்தியமூர்த்தி சென்றதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், தருசுவேலி என்னும் இடத்தில் சத்தியமூர்த்தி அரிவாளால் தலை, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ந்துபோன அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள், உடனே மன்னார்குடி போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, மன்னார்குடி டிஎஸ்பி மணிவண்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சத்தியமூர்த்தி உடலை கைப்பற்றி தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் 7 பேர் கொண்ட கும்பல் சத்தியமூர்த்தியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கருண் கரட் உத்தரவின் பேரில், மன்னார்குடி டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மன்னார்குடி நகர் பகுதியில் சத்தியமூர்த்தியை கொலை செய்த கும்பல் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் பிரவீன், அரவிந்த், மணிகண்டன், லெனின், இளமாறன், சூரிய பிரசாத், வினோத் ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகின.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் மணிகண்டனுக்கும், உயிரிழந்த சத்தியமூர்த்திக்கும் இடையே லாரியில் லோடு ஏற்றுவது தொடர்பாக கடந்த ஓராண்டு காலமாக முன்பகை இருந்து வந்துள்ளது.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சத்தியமூர்த்தியை சமாதானம் பேசுவதாக அழைத்து, அவரை பயங்கரமான முறையில் ஏழு பேரும் சேர்ந்து வெட்டி படுகொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதான ஏழு பேர் மீதும் கொலை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN