Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 28 ஏப்ரல் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளுமே வெயிலின் தாக்கத்தின் காரணமாக தற்போது தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் காணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுமார் ரூ.11 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகளானது நடைபெற்று வந்த நிலையில், தற்போது பழைய குற்றால அருவியில் பராமரிப்பு பணிகளானது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் பணிகளானது விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வரும் நிலையில், பழைய குற்றால அருவியில் முழுவதுமாக பணிகள் நிறைவு பெற்று சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்கப்பட உள்ளது.
குறிப்பாக, தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருவதால் குளிக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மழை பொழிந்து அருவியில் தண்ணீர் வரும் பட்சத்தில் பழைய குற்றால அருவியில் உடனடியாக குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றாலம் மெயின் அருவியின் முன்பக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, சீசன் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அதற்குள் பணிகளை நிறைவு செய்து வருகின்ற சீசனிலே குற்றாலம் மெயின் அருவியானது சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என தற்போது பலர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN