Enter your Email Address to subscribe to our newsletters

கேங்டாக், 28 ஏப்ரல் (ஹி.ச)
சிக்கிம் மாநிலதிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி கேங்டாக்கில் இன்று இளைஞர்களுடன் கால்பந்து விளையாடினார்.
இது குறித்த காணொளி ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது,
சிக்கிமில் உள்ள எனது இளம் நண்பர்களுடன் அழகான கேங்டாக் காலைப்பொழுதில் கால்பந்து விளையாடுவதைப் போன்று வேறெதுவும் இல்லை! என்று குறிப்பிட்டார்.
கால்பந்து மைதானத்தில் குழந்தைகளுடன் அன்பாக உரையாடி, விளையாட்டில் தீவிரமாக பிரதமர் மோடி பங்கேற்கும் காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
தனது பயணத்தின் போது, கேங்டாக்கில் உள்ள ஆர்க்கிடேரியத்தை மோடி இன்று பார்வையிட உள்ளார். சிக்கிமின் சூழலியல் மற்றும் மலர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், ஸ்வர்ணஜெயந்தி மைத்ரி மஞ்சரி பூங்கா உலகத்தரம் வாய்ந்த ஆர்க்கிட் அனுபவ மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பின்னர், பால்ஜோர் மைதானத்தில் நடைபெறும் சிக்கிமின் 50-வது மாநில ஆண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் மோடி இன்று பங்கேற்கிறார். அங்கு, உள்கட்டமைப்பு, இணைப்பு, சுகாதாரம், கல்வி, மின்சாரம், நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல், சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் மாநிலம் முழுவதும் ₹4,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். கூட்டத்தில் உரையாற்றவும் உள்ளார்.
நாம்சி மாவட்டம் யாங்காங்கில் 100 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், NIT டியோராலியில் 30 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த சோவா ரிக்பா மருத்துவமனையை திறந்து வைக்கிறார். இது சிக்கிமில் பாரம்பரிய மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை மேம்படுத்தும்.
யாங்காங்கில் சிக்கிம் பல்கலைக்கழகத்தின் நிரந்தர வளாகம்; சாக்குங்கில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிறப்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடம்; கேங்டாக் மாவட்டம் சோச்சேய்காங்கில் ஹெலன் லெப்சா மருத்துவக் கல்லூரி; கியால்ஷிங் மாவட்டம் டெண்டாமில் டெண்டாம் தொழில்முறை கல்லூரி ஆகியவற்றை அவர் திறந்து வைக்கிறார். ஹீ கியாதாங்கில் மாதிரி உறைவிடப் பள்ளிகள், மங்கன் மாவட்டம் மாங்ஷிலாவில் புதிய மாதிரி பட்டப்படிப்பு கல்லூரி, நாம்சி மாவட்டம் பூம்தார் கும்பாவில் மடாலய விடுதி-வகுப்பறை ஆகியவற்றையும் திறக்கிறார். கூடுதலாக, சிக்கிமில் உள்ள 160 பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி உள்கட்டமைப்பு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
நாம்சி மற்றும் கேங்டாக் மாவட்டங்களை இணைக்கும் வகையில், தீஸ்தா நதியின் குறுக்கே சிர்வானி மற்றும் லோயர் சாம்டாங்கில் இரண்டு கீல் இணைப்பு இரட்டை வழி எஃகு வளைவு பாலங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
கேங்டாக்கில் நம்பகமான மின்சார விநியோகத்தை வலுப்படுத்த, மின் பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்பை மேம்படுத்தி, மறுசீரமைக்கும் பணியை அவர் தொடங்கி வைக்கிறார்.
லும்சேயில் ஜன் சேவா சச்சிவாலயா (மினி தலைமைச் செயலகம்) மற்றும் கேங்டாக்கில் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் நிறுவனத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். லிங்டிங்கில் சிக்கிம் நகர்ப்புற ஏழைகள் வீட்டுவசதி திட்ட வீடுகள், காவல்துறையினருக்கான குடியிருப்புகள் மற்றும் SAP பாங்தாங்கில் ‘C’ தர குடியிருப்புகளையும் திறக்கிறார். MG சாலையில் சத்பாவ் மண்டபத்திற்கும் (பொது பயன்பாட்டு மையம்) அடிக்கல் நாட்டுகிறார்.
நதி மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சிகளின் கீழ், சிங்டாம் நகரில் கழிவுநீர் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். கேங்டாக்கில் மூன்றாம் மண்டலத்தில் ரோரோ சூ நதி வழியாக ராணி சூ நதிக்கான மாசு குறைப்பு திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இது நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நிலையான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு உதவும்.
கேங்டாக்கில் உள்ள ரிட்ஜ் ப்ரெசின்க்ட் மறுசீரமைப்பு; சோரெங் மாவட்டம் டோடாக்கில் சுற்றுச்சூழல்-சுற்றுலா மற்றும் புனித யாத்திரை உள்கட்டமைப்பு; 18-வது மைல் மற்றும் ஹங்கு ஏரியில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடர்பான வசதிகள்; நாம்பிங்கில் உள்ள கிருஷ்ண பிரணாமி மங்கல்தாமில் யாத்ரி நிவாஸ் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். கியால்ஷிங் மாவட்டம் சில்னானில் சுற்றுச்சூழல்-புனித யாத்திரை வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
விவசாயப் பதப்படுத்துதலை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் சிக்கிம் IFFCO பதப்படுத்தும் ஆலையை பிரதமர் திறந்து வைக்கிறார். இளைஞர்களின் ஈடுபாடு மற்றும் விளையாட்டு மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், பாக்யோங் மாவட்டம் ரங்போவில் உள்ள மைனிங்கில் உள்ளரங்க கிரிக்கெட் வசதிகளையும் திறக்கிறார்.
சிக்கிம் மாநிலமாக உருவானதன் பொன்விழா ஆண்டில் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது
Hindusthan Samachar / vidya.b