ஜுன் 1 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்
புதுச்சேரி, 28 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி அரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் கடந்த 25ந் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், வரவிருக்கும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க பொதுமக்களின் கடமை
Population Census Work Begins in Puducherry


புதுச்சேரி, 28 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி அரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் கடந்த 25ந் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், வரவிருக்கும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க பொதுமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இக்கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடு தோறும் சென்று தகவல்களை சேகரிக்கும் பணி ஜூன் 1ந் தேதி முதல் 30ந் தேதி வரை மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்பின் போது வீட்டு அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட மொத்தம் 33 விவரங்கள் சேகரிக்கப்படும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் படி, பொதுமக்கள் சில முக்கிய சட்டப்பூர்வ கடமைகளை கடைபிடிக்க வேண்டும். கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவது கட்டாயமாகும். வீடுகளில் கணக்கெடுப்பு அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார்.

தேவையானபோது, கணக்கெடுப்பு படிவங்களை சரியாக நிரப்பி ஒப்படைக்க வேண்டும். கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும். வழக்குகளிலும் இந்த தகவல்கள் சான்றாக பயன்படுத்தப்படமாட்டாது என்பதும் உறுதியாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் கணக்கெடுப்பு பணிகளில் ஒத்துழைக்காமல் இருப்பது, தவறான தகவல் வழங்குவது, அல்லது அலுவலர்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகும். இத்தகைய விதி மீறல்களுக்கு ரூ.1000ம் வரை அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி கலெக்டர் எச்சரித்துள்ளார்.

எனவே, அனைத்து பொதுமக்களும் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஆர்வத்துடன் பங்கேற்று, துல்லியமான தகவல்களை பணிகள் வெற்றிகரமாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b