Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் மின் தேவையை பகல் நேரம் மற்றும் இரவு நேரம் என பிரித்து அதில் ஏற்படும் இடைவெளியை பகுப்பாய்வு செய்து 10 ஆண்டு கால மின் திட்டத்தை உருவாக்க மின் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது.
மின் வாரியத்தை பொறுத்தவரை காலை 7 முதல் மாலை 6 மணி வரை உள்ள தேவையை பகல் நேர மின் தேவையாகவும், மிதமுள்ள நேரங்களை இரவு நேர மின் தேவையாகவும் கணக்கிட்டுள்ளது.
இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது,
மத்திய மின்சார ஆணையத்தின் மின் தேவை மற்றும் அதனை பூர்த்தி செய்யும் திறன் தொடர்பான 2026-27 முதல் 2035-36 ஆண்டு வரையிலான தேசிய மின்சார திட்ட அறிக்கையில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பகல் நேரத்தில் அதிக மின்தேவையும், இரவு நேரத்தில் அது 3ஆயிரம் முதல் 4 ஆயிரம் மெகாவாட் வரை குறையும் என தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பகல் மற்றும் இரவு நேர தேவை இடையிலான வித்தியாசத்தை ஆய்வு செய்யும் போது இரவு நேரத்தில் தேவை குறைவாக இருந்துள்ளதை மத்திய மின்சார ஆணைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது கடந்த 2 ஆண்டுகளில் சராசரி மின் தேவை பகல் நேரங்களில், ஏப்ரல் மாதத்தில் 20,081 மெகாவாட்டாகவும், மே மாதத்தில் 20,399 மெகாவாட்டாகவும், ஜூன் மாதத்தில் 21,183 மெகாவாட்டாகவும் இருக்கும் நிலையில், இரவு நேரங்களில் ஏப்ரல் மாதத்தில் 20,116 மெகாவாட்டாகவும், மே மாதத்தில் 19,688 மெகாவாட்டாகவும், ஜூன் மாதத்தில் 20,209 மெகாவாட்டாகவும் குறைந்துள்ளது.
கோடை காலங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாக இருக்கும். பகல் நேர அதிக தேவை சூரிய மின் உற்பத்தியால் பூர்த்தி செய்யப்படுகிறது.
இருப்பினும், நவம்பர் மற்றும் டிசம்பர் போன்ற பருவமழை மற்றும் குளிர்கால மாதங்களில், குறைந்த சூரிய உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகள் காரணமாக இந்த இடைவெளி குறைகிறது, சில நேரங்களில் அப்படியே தலைகீழாக மாறுகிறது.
பருவமழை காலத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் தேவை அதிகரித்தது. இந்த தேவை மரபுசார் மின் உற்பத்தி ஆதாரங்கள் வாயிலாகவே பூர்த்தி செய்யப்பட்டது. ஆனால் இரவு நேர தேவையில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
தற்போது கார்பன் உமிழ்வை குறைக்க புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் பசுமை மின் உற்பத்தி திறன் அதிகரித்து வரும் நிலையில் பகல் மற்றும் இரவு நேர தேவையை பகுப்பாய்வு செய்து 10 ஆண்டுகால மின் திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இதன்மூலம் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கு அனல் மின் நிலையம், சூரிய சக்தி, காற்றாலை போன்ற ஆதாரங்கள் எவ்வளவு பங்களிப்புகளை வழங்க வேண்டும் என்பது மதிப்பிடு செய்யப்படும்.
மேலும் எந்த நேரத்துக்காக எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதையும் மதிப்பிட உதவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b