பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி கவலைக்கிடம் – அதிகாரிகள் அலட்சியம் குற்றச்சாட்டு
தர்மபுரி, 28 ஏப்ரல் (ஹி.ச) தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்ட பரிதாபகரமான விபத்தில், 3 வயது சிறுமி உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பலி


தர்மபுரி, 28 ஏப்ரல் (ஹி.ச)

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்ட பரிதாபகரமான விபத்தில், 3 வயது சிறுமி உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தப் பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 90 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பள்ளியின் சுற்றுச்சுவர் நீண்ட நாட்களாக பலவீனமடைந்து, பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

சில பகுதிகளில் சுவர் ஏற்கனவே இடிந்து விழுந்திருந்தும், இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி காலை, அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தண்டபானி – அபிராமி தம்பதியரின் 3 வயது மகள் தாரிகா, பள்ளி நுழைவாயில் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, சுற்றுச்சுவரின் முன்பகுதி திடீரென இடிந்து சிறுமி மீது விழுந்தது. இதில் சிறுமியின் வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டது.

உயிருக்கு போராடிய சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அப்பகுதி ஊர் கவுண்டர் பழனிமுத்து கூறுகையில்,

பள்ளியின் சுற்றுச்சுவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. அதை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பள்ளி வேலை நாளில் இது நடந்திருந்தால், பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றார்.

மேலும், இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில், பொதுமக்கள் ஒன்றிணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam