Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 28 ஏப்ரல் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
மருதம்பூத்தூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் சேட் தாக்கல் செய்த மனுவில்,
அவரது மகன் மணிகண்டன் பனை மரத்தில் பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா உள்ளிட்ட போலீசார் சீருடை அணியாமல் வீட்டுக்கு வந்து, மணிகண்டனை பனைத் தோப்பிற்கு அழைத்து சென்று பானைகளில் கள் உள்ளதா எனச் சோதிக்க கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அப்போது மணிகண்டன் மீது சாதி சார்ந்த அவதூறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதை தடுத்த குடும்பத்தினரையும் போலீசார் மிரட்டியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டதில், அவரது இரு கால்களிலும் கடுமையான காயம் ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ அல்லது வேறு சுயாதீன அமைப்பிற்கு மாற்ற வேண்டும், மேலும் தற்போதைய போலீசாரின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்த போது,
சம்பவம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும், புதிய உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட போலீசார் விசாரணை மேற்கொள்ளக்கூடாது என்றும், பாதிக்கப்பட்டவருக்கும் காயமடைந்த காவலருக்கும் உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் நிலை துணை ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
துணை ஆட்சியர் காணொலி மூலம் ஆஜராகி, சம்பவ இடத்தில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பணிகள் காரணமாக விசாரணை நிறைவடையவில்லை என்றும், கால அவகாசம் வழங்கினால் விரைவில் அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, துணை ஆட்சியர் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தது.
Hindusthan Samachar / GOKILA arumugam