இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.) கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணியினர் சார்பாகக் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர
Court Orders Dismissal of Case Filed Against Thirumavalavan


சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணியினர் சார்பாகக் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வெறுப்பு கருத்துக்கள் தெரிவித்ததாக இந்து முன்னணி பொதுச்செயலாளர் சி.என். கண்ணன் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இதனையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் புதுச்சேரி போலீசார் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதன் படி இந்த வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி திருமாவளவன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரன் அமர்வில் இன்று (29.04.2026) விசாரணைக்கு வந்தது.

அப்போது திருமாவளவன் தரப்பில் வாதிடுகையில்,

கல்விக்கு எதிரானது சனாதன கொள்கை என்ற அடிப்படையிலே திருமாவளவன் பேசினார்.

வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கில் பேசவில்லை.

மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கக்கூடிய பிரிவின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஆறு ஆண்டுகள் தாமதமாக தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது எனவே இந்த வழக்கு தொடர முறையான அனுமதி பெறவில்லை.ஆகையால் இந்த வழக்கு ரத்து செய்ய வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி திருமாவளவனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b