பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் -காங்கிரஸ் எம்.பி. சுதா வலியுறுத்தல்
சென்னை ,29 ஏப்ரல் (ஹி.ச.) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றிருந்த பேரறிவாளன், நீண்டகால சட்டப்போராட்டத்திற்குப் பிறகு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்த காலத்திலேயே பல பட்டப்படிப்ப
C


சென்னை ,29 ஏப்ரல் (ஹி.ச.)

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றிருந்த பேரறிவாளன், நீண்டகால சட்டப்போராட்டத்திற்குப் பிறகு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் இருந்த காலத்திலேயே பல பட்டப்படிப்புகளை முடித்த பேரறிவாளன், 2022-ஆம் ஆண்டு விடுதலையான பின்னர் வக்கீல் தொழிலைத் தேர்வு செய்தார்.

பெங்களூருவில் உள்ள சட்டக்கல்லூரியில் 3 ஆண்டுகள் சட்டப்படிப்பை முடித்த அவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்யப்பட்டார்.

அவருக்கு கடந்த 27-ந்தேதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

54 வயதான பேரறிவாளன், சென்னை ஐகோர்ட்டில் கைதிகளுக்கான சட்ட உதவி வழங்கும் பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

இந் நிலையில்,

பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சுதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்-அமைச்சருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,அவர் கூறியதாவது:

ஒரு வழக்கறிஞராக, பேரறிவாளன் ஐகோர்ட்டு வளாகத்திற்குள் நுழைவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

அவரால் வக்கீல் அங்கி அணியவோ, சட்ட ஆவணங்களை அணுகவோ கூடாது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர் பேரறிவாளன். அவர் கருணை மனு மூலமே விடுதலை பெற்றார்.

பேரறிவாளனை பார் கவுன்சிலில் பதிவு செய்தது இந்திய நீதித்துறையின் கருப்பு நாளாகும்.

அவரை உடனடியாக நீக்க வேண்டும்.

மேலும், அவருக்கு பதிவு செய்ய உதவியவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA