நேற்று திருச்செந்தூர், இன்று ஷீரடி - தவெக தலைவரின் விஜய்யின் தொடர் ஆன்மீக பயணம்!
சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தற்போது ஆன்மீக தளங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று (ஏப்ரல் 28) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற
TVK Vijay Shirdi


சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தற்போது ஆன்மீக தளங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

நேற்று (ஏப்ரல் 28) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

மேலும், அங்கு சத்ரூ சம்ஹார யாகத்தை அவர் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உலக புகழ் பெற்ற சீரடி சாய்பாபா கோயிலில் விஜய் இன்று சாமி தரிசனம் செய்தார்.

இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர், அஹில்யநகரம் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அதைத்தொடர்ந்து, காரில் சாலை மார்க்கமாக பயணித்த அவர் மதியம் 1 மணி அளவில் சீரடி சாய்பாபா கோயிலை அடைந்தார்.

சாய்பாபா சன்னதிக்கு முன் நின்று கீழே குனிந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக சீரடி சாய்பாபா கோயில் உள்ளது.

ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.

அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இக்கோயிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று அரியணை ஏறப்போவது யார் என அறிந்துகொள்ளத் தமிழக மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN