Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது பேசிய அவர்,
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்மாற்றி கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிப்பது தனது கடமை என கூறிய அவர், சிபிஐ விசாரணை தொடங்கிய பின்னரே அது நியாயமாக நடைபெறுகிறதா என்பது தெளிவாகும் என்றார்.
முழுமையான உத்தரவு இன்னும் வெளியாகவில்லை, கடைசி பகுதி மட்டும் தான் வாசிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதை தாம் நெருக்கடியாக பார்க்கவில்லை என விளக்கம் அளித்தார்.
2021க்குப் பிறகு நடந்த விவகாரங்களை பிரித்து மறைத்து, அந்த அமைப்பு சுயமாக செயல்படாமல் அரசியல் நோக்கத்துடன் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, அரசுடன் பேசி முறையீடு செய்யும் வாய்ப்பை பரிசீலிப்போம் என்றார். வழக்கு பதிவு செய்யப்பட்டாலே குற்றவாளி என எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு என்றும், மக்கள் மன்றத்தில் தங்களை வீழ்த்த முடியாதவர்கள் அவதூறு பரப்புகின்றனர் என்றும் விமர்சித்தார்.
மேலும், சமீபத்திய தேர்தலைக் குறிப்பிட்டு, சில வாக்குச்சாவடிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் தாம் வாக்களிக்க செல்லவில்லை என தெரிவித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் பதவி ஏற்க உறுதி என்றும், மேற்கு மண்டலத்தில் 35 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
மின்சார வாரிய டெண்டர் நடைமுறைகள் குறித்து விளக்கமளித்த அவர், 1987 முதல் பின்பற்றப்பட்ட நடைமுறைகளே தற்போது தொடரப்படுகின்றன என்றார். டெண்டரில் பலர் கலந்து கொண்டு ஒரே விலை (L1) quote செய்வது வழக்கமானதாகும் என்றும், L1 விலையை ஏற்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் பிரித்து வழங்குவது TANGEDCO நடைமுறை என கூறினார்.
டெண்டரை இறுதி செய்ய மூன்று குழுக்கள் செயல்படுகின்றன என்றும், எந்த நடைமுறையும் மாற்றப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரத்தில் அரசு அல்லது மின்சார வாரியத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J