Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 30 ஏப்ரல் (ஹி.ச.)
தெலுங்குதேசம் கட்சியின் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய அரசியல் மாநாடான ‘மகாநாடு’ இந்த ஆண்டு எந்த இடத்தில் நடைபெறும் என்பது குறித்து கட்சிக்குள் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த ஆண்டு மகாநாட்டை ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பிரம்மாண்டமாக நடத்த கட்சி மேலிடம் முதலில் முடிவு செய்திருந்தது.
அதன்படி வருகிற மே 27, 28 மற்றும் 29-ந் தேதிகளில் மாநாட்டை நடத்த திட்டமிட்டு ஆரம்ப கட்ட ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், ஜூன் மாதத்தில் போகாபுரம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வட ஆந்திரா பகுதிக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமரின் பயணம் உறுதியாகும் பட்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், அதிகாரிகள் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக பணிச்சுமை காரணமாக அதே காலகட்டத்தில் ஸ்ரீகாகுளத்தில் மிகப்பெரிய அளவில் மகாநாடு நடத்துவது சிரமமாக இருக்கும் என தெலுங்குதேசம் கட்சி நிர்வாகம் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக மகாநாடு நடைபெறும் இடத்தை மாற்றுவது குறித்து கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மாற்று இடமாக நெல்லூரு மாவட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்லூரில் மாநாடு நடத்த ஏற்ற இடங்கள், போக்குவரத்து வசதிகள், தங்கும் வசதிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளின் ஒத்துழைப்பு போன்ற அம்சங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து மாநாட்டு இடம் மாற்றப்பட்டால் வட ஆந்திரா பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள் என்ற விவாதமும் கட்சிக்குள் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு தெலுங்குதேசம் கட்சியின் மகாநாடு கடப்பா மாவட்டத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மகாநாடு நடைபெறும் இட மாற்றம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், இதுதொடர்பாக கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விரைவில் இறுதி அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA