Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 30 ஏப்ரல் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அமராவதி தலைநகர் கட்டுமான பணிகள், அமைச்சர்களின் சிங்கப்பூர் பயணம், வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பேசிய முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு,
அமராவதி திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் தவறான பிரசாரங்களை உண்மை தகவல்களுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.
சட்டசபை, தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட கட்டிடங்கள் உலகத் தரத்தில் கட்டப்பட்டு வருவதாகவும், குறைந்த செலவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர்களின் சிங்கப்பூர் பயணத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருவது குறித்தும் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
சிங்கப்பூர் அரசு மற்ற எந்த மாநிலத்திற்கும் வழங்காத அரிய வாய்ப்பை ஆந்திரப் பிரதேசத்திற்கு வழங்கியுள்ளது.
அதை அரசியல் ஆதாயத்திற்காக விமர்சிப்பது சரியல்ல என்று அவர் கூறினார்.
நிர்வாக திறன், செல்வ உருவாக்கம் மற்றும் நவீன நகர வளர்ச்சி திட்டங்களை அறிந்து கொள்ளும் நோக்கத்தில்தான் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் உண்மையான நோக்கத்தை பொதுமக்களுக்கு அமைச்சர்கள் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், கட்டுமான செலவுகள் மற்றும் விலைவாசி தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் மறுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை சீர்செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், அமைச்சர்களும் இந்த துறைகளில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.
எதிர்கால வேலைவாய்ப்புகளில் ஏ.ஐ. அறிவு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.
அதேபோல், மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் கடும் வெயிலை கருத்தில் கொண்டு குடிநீர் வசதி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
ஜலதாரா, ஜல ஹாரதி, சூர்யகார் உள்ளிட்ட திட்டங்களின் இலக்குகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA