Enter your Email Address to subscribe to our newsletters

ஷோபியான், 30 ஏப்ரல் (ஹி.ச.)
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் அக்லர் பகுதியில் உள்ள குளிர்பதன கிடங்கில் ‘ஸ்டீமர்’ எனப்படும் நீராவி கொதிகலனை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று இரவு, ஷோபியான் மாவட்டம் அக்லர் பழ மண்டி பகுதியில் உள்ள ‘ஜும் ஜும்’ குளிர்பதன கிடங்கில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகும் பொருட்களை பதப்படுத்தி வைக்க பயன்படும் இந்த கிடங்கில், நீராவி உற்பத்தி செய்யும் ‘ஸ்டீமர்’ கருவியை 3 பொறியாளர்கள் பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கொதிகலன் வெடித்துச் சிதறியது.
வெடிவிபத்தில் சிக்கிய மூவரும் பலத்த காயங்களுடன் உடனடியாக ஷோபியான் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உத்தரப் பிரதேசம் அலிகரைச் சேர்ந்த பொறியாளர் சௌரப் சிங் உயிரிழந்தார். அவருடன் பணியில் ஈடுபட்டிருந்த திலீப் குமார், ராம் குமார் ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவரும் உ.பி.யின் அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
குளிர்பதன கிடங்குகளில் பயன்படுத்தப்படும் ஸ்டீமர் என்பது வெப்பம், அழுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக நீராவியை உற்பத்தி செய்யும் கொதிகலன் ஆகும். இது அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையில் இயங்குவதால், பழுதுபார்க்கும் போது சிறு கவனக்குறைவு ஏற்பட்டாலும் வெடிவிபத்து நிகழ அதிக வாய்ப்புள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b