கொலைக் குற்றவாளியை சுட்டுப்பிடித்த டெல்லி போலீசார் - தீவிர விசாரணை
புதுடெல்லி, 30 ஏப்ரல் (ஹி.ச.) தலைநகர் டெல்லியில் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த சுராஜ் என்கிற கனா என்பவரை கைது செய்ய, தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். வடமேற்கு டெல்லியில் உள்ள பிரேம
Delhi Police Shoot and Apprehend Murderer


புதுடெல்லி, 30 ஏப்ரல் (ஹி.ச.)

தலைநகர் டெல்லியில் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த சுராஜ் என்கிற கனா என்பவரை கைது செய்ய, தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

வடமேற்கு டெல்லியில் உள்ள பிரேம்பாரி புல் பகுதியில் சுராஜ் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் இன்று அதிகாலை அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீசாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளி, திடீரென காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

தற்காப்புக்காக போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், குற்றவாளி சுராஜ் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

உடனடியாக அவரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட சுராஜ் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், சமீபத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக அவர் தலைமறைவாக இருந்து வந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து வடமேற்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b