Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 30 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த சூழ்நிலையில், நேற்று மாலை பல்வேறு முன்னணி செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கணிப்புகள் முன்னுக்குப் பின் முரணான முடிவுகளைக் காட்டுகின்றன.
இந்த நிலையில், பிரதான கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது கட்சி வெற்றி பெற வேண்டி ஆன்மீக வழிபாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த வரிசையில், இன்று காலை முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தனர்.
இவர்களுடன் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் சேதுபதி ஆகியோரும் உடனிருந்தனர்.
இன்று அதிகாலை நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் அவர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து மூலவர், சண்முகர் ஆகியோருக்கு நடைபெற்ற விசேஷ தீபாராதனைகளைத் தரிசித்தனர்.
பின்னர் தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை, சத்ரு சம்ஹார மூர்த்தி மற்றும் பெருமாள் சன்னதிகளுக்குச் சென்று சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ததைத் தொடர்ந்து, இன்று திருச்செந்தூரில் வழிபாடு நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b