Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.
தொடக்க வீரர் ரிக்கல்டன் ஐதராபாத் பந்துவீச்சை சிதறடித்து 55 பந்துகளில் 121 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்களும் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் என்ற பிரமாண்ட ஸ்கோரை பதிவு செய்தது.
இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கி மும்பை பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டனர்.
அதில் டிராவிஸ் ஹெட் வெறும் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
மறுமுனையில் அபிஷேக் சர்மாவும் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் முதல் பந்திலேயே அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹெட் 30 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின்னர் ஹெய்ன்ரிச் கிளாசன் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
நிதிஷ் நிதானமாக விளையாடிய நிலையில் கிளாசன் மும்பை பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அவர் 22 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
நிதிஷ் குமார் ரெட்டி 17 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கிளாசனுடன் இணைந்த சலில் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் 18.4 ஓவர்களில் ஐதராபாத் அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
கிளாசன் 30 பந்துகளில் 65 ரன்களுடனும், சலில் 10 பந்துகளில் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை அணியின் பந்துவீச்சில் ஏ.எம். கஸன்பர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA