Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 30 ஏப்ரல் (ஹி.ச.)
கன்னியாகுமரியில் சுற்றுலா வந்த பின்னர் மாயமான இரண்டு இளம் பெண்கள் கடலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த சகோதரிகள் ஆனி பிலிப் (35), மீரா பிலிப் (32) ஆகியோர் வாவத்துறை தூண்டில் வளவு கடல் பகுதியில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டனர்.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த உடல்களை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீனவர்கள் உதவியுடன் உடல்களை மீட்டனர்.
பின்னர் உறவினர்கள் அடையாளம் கண்டதையடுத்து, உடல்கள் உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த பிலிப் – மேரி தம்பதியரின் மகள்கள் ஆனி பிலிப் மற்றும் மீரா பிலிப் என்பதும் தெரியவந்துள்ளது.
இருவரும் கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலை பார்த்து வந்ததாகவும், ஆண்டு தோறும் சொந்த ஊருக்கு வருவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
இந்த முறை இந்தியா வந்த அவர்கள் ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்த பின் கடந்த 26ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர்.
அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்த அவர்கள் வெளியே சென்ற பின்னர் இரண்டு நாட்களாக திரும்பி வராததால் சந்தேகம் ஏற்பட்டது. லாட்ஜ் நிர்வாகம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, உறவினர்கள் வந்து தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், தற்போது அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கன்னியாகுமரி சுற்றுலா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam