திருச்செந்தூர் கோயிலில் ரூ.3.95 கோடி உண்டியல் காணிக்கையாக வருவாய்
தூத்துக்குடி, 30 ஏப்ரல் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது. மேலும், இந்த கோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் நிலையில்,
Undiyal


தூத்துக்குடி, 30 ஏப்ரல் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது. மேலும், இந்த கோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் நிலையில், இங்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதேபோல், திரைப் பிரபலங்கள் பலர் வாடிக்கையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை புரிகின்றனர்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்கோயிலுக்கு வந்த விஜய், எதிரிகளை வீழ்த்தும் சத்ரு சம்ஹார யாகத்தில் ஈடுபட்டார்.

மேலும், திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக அதிகளவில் பணம், தங்க, வெள்ளி, பொருட்களை செலுத்துகின்றனர். அந்த காணிக்கைகள் மாதம்தோறும் எண்ணப்படும்.

அதன்படி, இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நிர்வாக அலுவலகம் அருகே உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ராமு முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது. உழவாரப்பணி குழுவினர், மற்றும் கோயில் பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரூ.3 கோடியே 95 லட்சத்து 64 ஆயிரத்து 510 ரூபாய் ரொக்கம் உண்டியலில் காணிக்கையாக பெறப்பட்டிருப்பதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும், 803 கிராம் தங்கமும், 17,765 கிராம் வெள்ளியும், 944 வெளிநாட்டு கரன்சியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

அதேபோல், உண்டியல் காணிக்கை எண்ணிய போது முருகன், வள்ளி - தெய்வானையுடன் இருப்பது போன்ற 150 கிராம் எடை கொண்ட வெள்ளி சிலையும் கிடைத்துள்ளது.

அதனுடன் சேர்த்து 6 கிராம் எடை கொண்ட தங்க வேலும் இருந்தது. இதேபோல், கடந்த மாதம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கையை எண்ணிய போது ரூ, 4.36 கோடியே 36 லட்சத்து 87 ஆயிரத்து 797 ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN