த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சி வேட்பாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம்
சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.) நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வரும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என இரண்டு மாநிலங்களிலும் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள அக்கட்சியில் தலைமை அலுவலகத்தில் இ
த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சி வேட்பாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம்


சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)

நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வரும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என இரண்டு மாநிலங்களிலும் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள அக்கட்சியில் தலைமை அலுவலகத்தில் இன்று (30.04.2026) நடைபெற்றது.

அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தமிழகம் முழுவதிலும் இருந்து 232 வேட்பாளர்களும், புதுச்சேரியிலிருந்து 30 வேட்பாளர்களும் வருகை தந்திருந்தனர்.

இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எந்தெந்த பூத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற விவரங்கள் அடங்கிய 17 சி படிவத்தையும் அக்கட்சியின் தலைமையிடம் வழங்கியுள்ளனர்.

அதோடு வரும் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறக்கூடிய வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் என்னென்ன முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும், எவ்வாறு எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும் என பல்வேறு விஷயங்கள் குறித்து வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக வாக்குப்பதிவுக்குப் பிந்தைய பல்வேறு கருத்துக்கணிப்புகள் நேற்று (29.04.2026) வெளியாகின.

அதாவது தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கணிப்புகள் முன்னுக்குப் பின் முரணான முடிவுகளைக் காட்டுகின்றன.

அதிலும் குறிப்பாக ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் த.வெ.க. 98 முதல்120 இடங்கள் வரை வென்று ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என கணிப்பை வெளியிட்டிருந்தது.

மற்ற நிறுவனங்கள் த.வெ.க.விற்கு 10 முதல் 40 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b