திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப விவசாயிகள் முடிவு - தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
மயிலாடுதுறை, 04 ஏப்ரல் (ஹி.ச) மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டையில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் சங்கத்
Vivasayigal Sangam


மயிலாடுதுறை, 04 ஏப்ரல் (ஹி.ச)

மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டையில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,

சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் திமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது. ஏன் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என்பதை விளக்கும் 36 காரணங்களை முன் வைத்து பரப்புரையை தொடங்கியுள்ளோம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஒவ்வொரு விவசாயியும் 1,000 விவசாயிகளை சந்தித்து திமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்கள்.

திமுக ஆட்சியில் விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அறவழியில் போராடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் செய்யாமல் ஊழல் மட்டுமே செய்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர், ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தால் எள்ளி நகையாடுவது, அலட்சியப்படுத்துவது போன்ற சம்பவங்களும் நடந்தன.

ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு அடி நிலம் கூட விவசாயிகள் அனுமதி இன்றி எடுக்கமாட்டோம் என்று மு.க..ஸ்டாலின் கூறினார். ஆனால் 1.10 லட்சம் ஏக்கர் நிலம் கடந்த 5 ஆண்டுகளில் அபகரிக்கப்பட்டுள்ளது. 40 இடங்களில் சிப்காட், கிருஷ்ணகிரியில் மட்டும் 40,000 ஏக்கர் என தமிழ்நாட்டில் இனாம் நிலம் 13 லட்சம் ஏக்கரை இல்லாமல் செய்துள்ளனர்.

நெல்லுக்கு ரூ.2500 தருவதாக அறிவித்தனர். 2026 தேர்தல் அறிக்கையில் 61 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் கொடுத்த கூறப்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் கொடுக்கவில்லை. பயனாளிகள் பட்டியலை கொடுக்க மறுக்கின்றனர். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப விவசாயிகள் முடிவெடுத்துள்ளோம். இந்த தேர்தலில் உரிய பாடம் புகட்டுவோம். எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்பது மட்டும் தான் எங்கள் கோரிக்கை.

அதிமுக தேர்தல் அறிக்கை 50 சதவீதம் வரவேற்கதக்கதாக உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் எதுவுமே இல்லை. நாம் தமிழர் கட்சியில் கள் இறக்க அனுமதி அளிப்போம்,

வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வோம் என்று கூறுவது நன்றாக உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்து சொன்னதை செய்யவில்லை என்றால், அவர்களுக்கு எதிராகவும் நாங்கள் போராடுவோம் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN