தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனுத் தாக்கல்
தூத்துக்குடி, 06 ஏப்ரல் (ஹி.ச.) சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதா
Minister Geetha Jeevan files nomination


தூத்துக்குடி, 06 ஏப்ரல் (ஹி.ச.)

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

முன்னதாக, தூத்துக்குடி சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து அமைச்சர் கீதா ஜீவன் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டார். இந்த ஊர்வலத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

ஊர்வலமானது அழகர் ஜுவல்லர்ஸ், பெரிய பள்ளிவாசல், தந்தி ஆபீஸ், பழைய மாநகராட்சி அலுவலகம், சின்னக்கோவில் மெயின் வாயில் மற்றும் சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷன் வழியாகச் சென்றது.

மக்கள் கூட்டத்திற்கு இடையே அமைச்சர் கீதா ஜீவன் நடந்தே சென்று, பழைய துறைமுகம் அருகில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தார். அங்கு தூத்துக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபு அவர்களிடம் தனது வேட்புமனுவை முறையாகத் தாக்கல் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், தொழிற்சங்கத் தலைவர் சுசி ரவீந்திரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட மருத்துவ அணித் தலைவர் டாக்டர் அருண்குமார் தேமுதிக மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b