வில்லியனூர் தொகுதியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீவிர தேர்தல் பிரசாரம்
புதுச்சேரி , 06 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி இன்று பிரச்சாரம் செய்தார். பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே கிராமம் தோறும் அவர் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உத்த
வில்லியனூர் தொகுதியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி  தீவிர தேர்தல் பிரசாரம்


புதுச்சேரி , 06 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி இன்று பிரச்சாரம் செய்தார்.

பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே கிராமம் தோறும் அவர் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உத்தரவாகிணிபேட் பகுதிக்கு அவர் சென்றபோது மக்கள் மலர் தூவி மாலை அணிவித்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது முதல்வர் ரங்கசாமி பேசுகையில்,

கடந்த 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சியைக் கொடுத்தது என்டிஏ அரசுதான். அதற்கு முந்தைய காங்கிரஸ் - திமுக அரசு எதையும் செய்யவில்லை. என் அரசு 5000 பேருக்கு அரசு வேலை வழங்கியுள்ளது என்றார்.

அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள். தங்கள் பகுதிக்கு மனை பட்டா வழங்கப்படவில்லை. அரசு வேலை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.

பொது பணித்துறையில் வேலை கிடைத்தவர்களுக்கு அரசாணை வழங்கப்படவில்லை என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.

இதற்கு முதல்வர் ரங்கசாமி பதில் கூறுகையில்,

மீண்டும் எனது அரசு ஆட்சிக்கு வந்து நான் முதல்வரான பிறகு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன். அரசுத் துறைகளில் 5000 பேருக்கு வேலை கொடுத்துள்ளோம். அடுத்து ஆட்சிக்கு வரும்போது மீண்டும் மக்களுக்கு வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுப்பணித்துறையில் அரசாணை வழங்கவில்லை என்று கூறுகிறீர்களே. அது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இருப்பது தெரியுமா? வேலைக்கு வைத்தவர்கள் பேக் டோர் (பின்வாசல்) வழியாக வைத்ததாக நீதிமன்றம் கூறியுள்ளது.

இருப்பினும் மக்களுக்காக நான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இந்தப் பதவி எவ்வளவு பெரிய கஷ்டம் என்று தெரியுமா?. அதில் உட்கார்ந்து கொண்டு மக்களுக்கு நல்லது செய்கிறேன். பொதுப்பணித்துறையில் பத்தாயிரம் ரூபாய் என இருந்த சம்பளத்தை 18,000 ரூபாயாக உயர்த்தி உள்ளேன். என்னைத் தவிர உங்களுக்கு யாரும் உதவி செய்ய மாட்டார்கள்.

நான் முதல்வராகி அனைத்து திட்டங்களையும் மீண்டும் செயல்படுத்துவேன். மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றுக் கட்சி ஆட்சி இருந்தால் புதுச்சேரியில் எதையும் செய்ய முடியாது.

எப்பேர்பட்டவராக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி வரவேண்டும்

என்று பதில் தந்து பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

Hindusthan Samachar / vidya.b