புதுச்சேரி பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் - ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி
புதுச்சேரி, 06 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி மாநிலத்தில் ஏப்ரல் 9ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதுச்சேரி மாநிலத்த
Rahul Gandhi's Election Promise


புதுச்சேரி, 06 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி மாநிலத்தில் ஏப்ரல் 9ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் பரப்புரைக்காக இன்று வருகை தந்தார்.

இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்தியை புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியலிங்கம், திமுக அமைப்பாளர் சிவா, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்தியா கூட்டணியில் போட்டியிடும் 16 காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் திமுக, விசிக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி மேடையில் பேசினார்.

அவர் பேசியதாவது,

புதுச்சேரிக்கு அடிக்கடி வராதது தவறு தான். தற்போது நான் இங்கு வரும் போது, மனதிற்குள் சிறு வருத்தம் ஏற்பட்டுள்ளது.

அது என்னவென்றால், இந்த மாநிலத்தை டில்லியில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்தப்படுவதுதான். பாஜவின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களையும் புகுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, புதுச்சேரி மக்களின் எண்ணங்களை உள்வாங்கி, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு இல்லை.

இங்கிருக்கும் துணைநிலை கவர்னரை வைத்து இந்த மாநிலத்தை ஆட்டிப்படைக்கிறதே தவிர, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. இங்கு பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தொழில்துறை நசுக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியை அதானிக்கு விற்க பாஜ முயற்சித்து வருகிறது. ஏற்கனவே, காரைக்கால் துறைமுகம் அவருக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. மின்வாரியம் அதானிக்கு விற்கப்பட உள்ளது.

இங்கு போலி மருந்துகள் தயாரிப்பு அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கு 30 சதவீதம் கமிஷனை அரசு பெற்றுக் கொள்வது அனைவருக்கும் தெரியும். பள்ளிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகே மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. இதனால், சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுகிறது.கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. புதுச்சேரியில் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஊழல் நடக்கிறது.

எங்களைப் பொறுத்தவரையில் புதுச்சேரியை துணைநிலை கவர்னர் மன்னர் போல செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. புதுச்சேரியின் மண்ணின் மைந்தர்கள் ஆள வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. எனவே, ஆட்சிக்கு வந்தவுடன் 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் அவர் அளித்த வாக்குறுதிகள் பின்வருமாறு:

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை

அரசு மற்றும் தனியார் துறையில் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

புதுச்சேரி பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்

அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 40ஆக உயர்த்தப்படும்

ஒரு குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு

ஆட்சிக்கு வந்தவுடன் 6 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b