Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ இடம் பெற்றுள்ளது.
இதில் பாஜ 27 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த முறை கடந்த தேர்தலில் பெற்ற வெற்றிகளை விட அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில், பிரதர் மோடி, பாஜ தேசியத் தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழகம் வர உள்ளனர்.
அண்மையில் பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. முதலமைச்சர்கள் அடங்கிய தேர்தல் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக பாஜக வெளியிட்டது.
அந்த வகையில் கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்து 2 நாட்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வர உள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,
தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
தமிழ்மண்ணில் நின்று, மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?
கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?
தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம்_ஒன்றாக!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b