Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச)
2021 முதல் 2023ஆம் ஆண்டுகள் வரை 45,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இ.சரவணன், ராஜ்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில், ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே விலையை குறிப்பிட்டதன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சிறப்பு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் அமைச்சர் மற்றும் மின் வாரிய உயர் அதிகாரிகள் தொடர்புடையவர்கள் என்பதால், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என சரவணன் மற்றும் ராஜ்குமார் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த டான்ஜெட்கோ தரப்பு, அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரே விலையை குறிப்பிடும் நடைமுறை 1987ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் வழக்கமான செயல்முறை என்றும், இதில் முறைகேடு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தது.
அரசு தரப்பு வாதங்கள் இன்னும் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் நாளைக்கு தள்ளி வைத்தது.
Hindusthan Samachar / P YUVARAJ