மத்தியப் பிரதேசத்தில் படகு கவிழ்த விபத்து- 9 பேர் பலி
ஜபல்பூர், 01 மே (ஹி.ச.) மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில், நர்மதை ஆற்றின் மீதான பர்கி அணை நீர்த்தேக்கத்தில் அம்மாநில சுற்றுலாத்துறை இயக்கிய சொகுசு படகு சுற்றுலா ஒன்று சென்று கொண்டிருந்தது. சுமார் 29 முதல் 40 ப
9 killed in boat capsize accident in Madhya Pradesh.


ஜபல்பூர், 01 மே (ஹி.ச.)

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில், நர்மதை ஆற்றின் மீதான பர்கி அணை நீர்த்தேக்கத்தில் அம்மாநில சுற்றுலாத்துறை இயக்கிய சொகுசு படகு சுற்றுலா ஒன்று சென்று கொண்டிருந்தது.

சுமார் 29 முதல் 40 பயணிகளுடன், 2 பணியாளர்களும் படகில் இருந்தனர்.

திடீரென வானிலை மாறி, மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது. காமரியா தீவு அருகே சுமார் 300 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்து நடந்த உடனே உள்ளூர் மீனவர்கள், எஸ்டிஆர்எஃப் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியைத் தொடங்கினர். இந்த விபத்தில் இது வரை 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து உள்ளூர் காவல்படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் கமாண்டன்ட் நீரஜ் சிங் ராஜ்புத் கூறுகையில்,

நிலைமை கடினமாக உள்ளது. நேற்றிரவு மழையும் இருளும் இருந்ததால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், விளக்குகள் மற்றும் பிற உபகரணங்களின் உதவியுடன் பணியைத் தொடர்ந்தோம். இன்று தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவக் குழுக்கள் வந்த பிறகு 5 உடல்களை மீட்டோம். இதுவரை மொத்தம் 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

ஜபல்பூர் மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர், மீட்கப்பட்ட 24 பேர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், காயமடைந்த அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங் கூறுகையில், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இச்சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாகவும், மனவேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்ட அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் தர்மேந்திர சிங் லோதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சந்தேகிக்கிறேன். விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அலட்சியம் இருப்பது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Hindusthan Samachar / vidya.b