Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 01 மே (ஹி.ச.)
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் இஷாங்க்.
7 வயது சிறுவனான இவர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்து அசாதாரண சாதனை படைத்துள்ளார்.
இலங்கை தலைமன்னாரிலிருந்து நேற்று (ஏப்ரல் 30) அதிகாலை 4 மணியளவில் நீந்த தொடங்கிய இஷாங்க், மதியம் 1 மணி 50 நிமிடங்களில் ராமநாதபுரத்தின் தனுஷ்கோடியை வந்தடைந்தார்.
கடலின் பலத்த நீரோட்டம் மற்றும் அலைகளையும் சமாளித்து 29 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 9 மணி 50 நிமிடங்களில் கடந்தார்.
இஷாங்கின் நீச்சல் பயணம் TSUSA (Travel South USA) அமைப்பின் அதிகாரப்பூர்வ கண்காணிப்பாளர் டாக்டர் எம். விஜய்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்து உலகின் மிக இளம் மற்றும் அதிவேக நீச்சல் வீரர் என்ற இரட்டை சாதனைகளை நிகழ்த்திய இஷாங்கின் இந்த சாதனையை, யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் ஃபோரம் URF அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.
ராஞ்சியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் இஷாங்க், குழந்தை பருவத்தில் இருந்தே நீச்சல் பயிற்சியில் சிறந்து விளங்கி வருகிறார்.
தேனியில் உள்ள ஓபன் வாட்டர் ஸ்விம்மிங் அகாடமியில் பெற்ற பயிற்சியே இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறுகிறார் இஷாங்க். சிறுவயதிலேயே உலக சாதனை படைத்த இவர் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
சிறுவனின் தன்னம்பிக்கை மற்றும் சாதனையை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN