Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 01 மே (ஹி.ச.)
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் பொங்கல் பண்டிகை அன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள், அலங்காநல்லூருக்கு வருகைத் தந்து கண்டு ரசிப்பார்கள்.
அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு போட்டிக்காக மட்டுமே ஆண்டு முழுவதும் பல்லாயிரம் ரூபாய் செலவுகளைச் செய்து காளைகளை வளர்க்கும் மதுரை மக்கள், அதனை தங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவும் கருதுகின்றனர்.
அதற்கு எடுத்துக்காட்டு, ஜல்லிக்கட்டு காளைக்கு அலங்காநல்லூர் கிராம மக்கள் பிறந்தநாள் கொண்டாடியதே. அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காளை கன்றுக்குட்டியை வாங்கினர்.
தற்போது 'வீர காளை'யாக மாறியுள்ள நிலையில் 'கரிகாலன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த காளையை அலங்காநல்லூரில் உள்ள முனியாண்டி திருக்கோயிலின் பூசாரி லோகு பராமரித்து வளர்த்து வருகிறார்.
தற்போது 'கரிகாலன்' காளை பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பல்வேறு பரிசுப் பொருட்களை வாங்கிக் குவித்து வருகிறது.
இந்த நிலையில், அலங்காநல்லூருக்கு பெருமை 'கரிகாலன்' காளையின் 9-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (மே 01) கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
அத்துடன் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கி அசத்தினர்.
Hindusthan Samachar / ANANDHAN