Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 01 மே (ஹி.ச.)
தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த தற்போதைய கால கட்டத்தில், அதனை பயன்படுத்தி பல்வேறு வகையான மோசடிகளும் அரங்கேறுகின்றன.
தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணம் திருடுவது போன்ற சம்பவங்களும் அதிகம் உள்ளன.
ஆன்லைன் மோசடிகள் நடைபெறுவதும் நாளுக்குநாள் கூடி கொண்டே செல்கின்றன. இதனை தடுக்க அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் சைபர் கிரைமுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் பெயரில் போலியாக சமூக வலைதள கணக்குகள் துவக்கப்பட்டு பலரிடம் பணம் கேட்டு ஏமாற்றுவதும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியராக கடந்த ஓராண்டிற்க்கு மேலாக லட்சுமி பவ்யா தண்ணீரு பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீருவின் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தி பலருக்கும் வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி இன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில் தான் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு என அறிமுகப்படுத்தி கொண்டு, அவசர உதவி வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதனை நம்பிய சிலர் திரும்ப குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பி உள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் ஒரு திட்டத்திற்காக பணம் அனுப்ப முயற்சித்த போது, என்னுடைய வங்கி கணக்கு மூலம் பணம் அனுப்புவதில் பிரச்சனை உள்ளது.
என் சார்பில் நீங்கள் பண பரிவர்த்தனை செய்ய முடியுமா? பின்னர் நான் உங்களுக்கு பணத்தை திருப்பி தருகிறேன், என ஆட்சியர் அனுப்புவது போல் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த சிலர், இதுகுறித்து உடனடியாக ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே போலியான எண்ணில் இருந்து எனது பெயரை பயன்படுத்தி மோசடி குறுஞ்செய்திகள் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து சைபர் பிரிவு காவல்துைறயினர் விசாரித்து வருகின்றனர்.
எனது தனிப்பட்ட பெயரை பயன்படுத்தி புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால் அதற்கு பதிலளிக்கவோ, பணம் அனுப்பவோ வேண்டாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சைபர் கிரைம் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தாய்லாந்தில் இருந்து மோசடி குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN