த.வெ.க தலைவர் விஜய் நாளை வேளாங்கண்ணி செல்ல திட்டம்
சென்னை, 01 மே (ஹி.ச.) தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் முதன் முறையாக பங்கெடுத்துள்ளார். விஜய் இந்தத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட
TVK leader Vijay plans to visit Velankanni tomorrow.


சென்னை, 01 மே (ஹி.ச.)

தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் முதன் முறையாக பங்கெடுத்துள்ளார்.

விஜய் இந்தத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

தவெக மொத்தம் 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மட்டும் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது. எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களம் கண்டது.

இதையடுத்து மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் விஜய், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அதிகாலையிலேயே பட்டு வேட்டி சட்டை அணிந்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு தரிசனமான விஸ்வரூப தரிசனத்தில் விஜய் கலந்து கொண்டார்.

திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பியதைத் தொடர்ந்து அடுத்த நாளே (29-04-26) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு விஜய் தரிசனம் செய்தார்.

இப்படியாக தொடர்ச்சியாக அவர் பல்வேறு கோயில்களுக்கு வழிபாடு நடத்தி வரும் நிலையில், நாளை (02-05-26) நாகப்பட்டினம் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நாளை அதிகாலை 5 மணியளவில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் விஜய் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து அவர் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு சென்று வழிபாடு நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக அவர் இன்று இரவே வேளாங்கண்ணியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b