Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 மே (ஹி.ச.)
டெல்லி உயர் நீதிமன்றம், சூர் காட் பகுதியில் உள்ள யமுனை வெள்ளப்பெருக்கு சமவெளியில் வாகன நிறுத்தம் மற்றும் வணிக பயன்பாடு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்யுமாறு டெல்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு (DDA) இன்று உத்தரவிட்டுள்ளது.
இப்பகுதியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் 'Zone-O' என வகைப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
யமுனை சூர் காட்டில் உள்ள வாகன நிறுத்த தளத்தின் உரிமையை மீட்டெடுக்கக் கோரி சுரேஷ் குமார் தாக்கல் செய்த மனுவை முடித்து வைக்கும்போது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த தளம் முன்னதாக டெல்லி மாநகராட்சி (MCD) டெண்டர் மூலம் ஒதுக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் 2022-ல், யமுனை சூர் காட் உள்ளிட்ட பல்வேறு வாகன நிறுத்த தளங்களுக்கு டெல்லி மாநகராட்சி டெண்டர் அறிவிப்பு வெளியிட்டதாகவும், அதில் தான் அதிகபட்ச ஏலதாரராக அறிவிக்கப்பட்டதாகவும் மனுதாரர் தெரிவித்தார்.
பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் முன்பண உரிமக் கட்டணம் செலுத்திய பின், தளம் ஒப்படைக்கப்பட்டு ஜனவரி 2023 முதல் செயல்பாடுகள் தொடங்கியதாக அவர் கூறினார்.
இருப்பினும், விசாரணையின்போது, 2,508 சதுர மீட்டர் நிலம் மட்டுமே மாற்றப்பட்டதாக டெல்லி மேம்பாட்டு ஆணையம், டெல்லி மாநகராட்சிக்கு தெரிவித்திருந்தது தெரியவந்தது.
ஆனால் டெல்லி மாநகராட்சிக்கு, மனுதாரருக்கு 3,780 சதுர மீட்டரை ஒதுக்கியிருந்தது. இதையடுத்து, டெல்லி மேம்பாட்டு ஆணையம் அனுமதியை திரும்பப் பெற்றது, டெல்லி மாநகராட்சி ஜனவரி 2025-ல் வாகன நிறுத்த ஒதுக்கீட்டை ரத்து செய்தது.
இந்த தளம் Zone-O-வின் கீழ் வரும் யமுனை வெள்ளப்பெருக்கு சமவெளியில் அமைந்துள்ளதாகவும், வணிக ரீதியாக பயன்படுத்த முடியாது எனவும் டெல்லி மேம்பாட்டு ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை நீதிமன்றம் குறிப்பிட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் நலனுக்காக வணிக மற்றும் மத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என நீதிபதி ஜஸ்மீத் சிங் வலியுறுத்தினார்.
மேலும், புனித நாட்களில் யமுனை நதிக்கு வரும் பக்தர்களுக்காக மாற்று வாகன நிறுத்த வசதிகளை டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், அந்த ஏற்பாடுகள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும், மேம்பாட்டு நோக்கங்களுக்காக அப்பகுதியை அவசரமாக காலி செய்ய வேண்டும் என டெல்லி மேம்பாட்டு ஆணையம் கோரியதும் பதிவு செய்யப்பட்டது.
வாகன நிறுத்த தளத்தை மீட்டெடுக்கும் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம், ஜனவரி 31, 2025 தேதியிட்ட ரத்து உத்தரவை மனுதாரர் தற்போதைய வழக்கில் எதிர்க்கவில்லை என சுட்டிக்காட்டியது.
ரத்து உத்தரவின் செல்லுபடித்தன்மை மற்றும் இழப்பீட்டு கோரிக்கைகள் தொடர்பான விவகாரங்கள் சர்ச்சைக்குரிய உண்மை சார்ந்த கேள்விகளை உள்ளடக்கியது என்றும், அவற்றை ரிட் மனுவில் ஆராய முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
தேவைப்பட்டால், இழப்பீடு கோரி உரிமையியல் வழக்கு தொடர்வது உட்பட உரிய சிவில் பரிகாரங்களை நாட மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
Hindusthan Samachar / vidya.b