Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (OSD) ஜோதிடரை நியமித்ததற்கு தமிழக வெற்றிக் கழக (TVK) அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) கூட்டணிக் கட்சிகளான மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) ஆகியவை இன்று கண்டனம் தெரிவித்தன.
தமிழக முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நேற்று நியமிக்கப்பட்டார்.
அந்த நியமனம் குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட கடிதத்தில்,
திரு. ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், பணியில் சேரும் நாள் முதல் முதலமைச்சருக்கான (அரசியல்) சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
இது தொடர்பான நிபந்தனைகள் தனியே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜோதிடராகவும், த.வெ.க செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வரும் பண்டிட், சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்சித் தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தார்.
இந்த நிலையில் தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.ஜ.க தலைவரும் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி, இன்றைய சட்டப்பேரவையில் பேசுகையில்,
அரசாங்கத்தில் ஜோதிட சூத்திரங்களை சேர்க்க வேண்டாம். தனிப்பட்ட முறையில் நம்புவதில் பிரச்சினை இல்லை, ஆனால் அது அரசாங்கத்திற்குள் வரக்கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் த.வெ.கவை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தார்.
தே.மு.தி.க பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பிரேமலதா விஜயகாந்த், ஜோதிடர் ராதன் பண்டிட்டை முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமித்தது கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டார்.
தேமுதிக பொதுச் செயலாளர் எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது,
எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து அரசியலில் ஒரு மாண்பையும் மரபையும் முதல்வர் ஏற்படுத்திருக்கிறார். அதே போல், பெண்களை பாதுகாப்பதற்கு சிங்கப்படை திட்டமும், மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னதும் மக்களால் வரவேற்கப்படுகிறது.
அந்த வகையில் முதலில் 717 மதுக்கடைகளை மூடியது தமிழக மக்களால் வரவேற்கப்படுகிறது. அதே போல், மீனவர்களை பாதுகாக்க தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வந்திருக்கிறது. அதையும் தேமுதிக வரவேற்கிறது.
இருப்பினும், முதல்வர் பதவியேற்ற அன்றைக்கு உங்களுடைய ஆட்சி வெளிப்படைத்தன்மையாக இருக்கும் என்றும் தமிழ்நாட்டுக்கு முன்னுதாரணமான ஆட்சியாக இருக்கும் என்று சொன்னார். அது போல், அரசு குடும்பத்தில் இருந்து வந்தவன் அல்ல, எளிய குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் என்றும் சொன்னார். நமது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்.
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற இந்த தருணத்தில் மிகுந்த மனவேதனையுடன் பதிய வைக்கிறேன். இங்கு குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்திருக்கிறது. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காத விஷயம். அந்த விஷயத்தை இங்கு பேசவேண்டிய நிலையை ஏற்பட்டதற்கு மன வேதனை அடைகிறேன்.
இங்கு முகமூடி அணிய வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை என்றும் அனைவருக்கும் வெளிப்படையான ஆட்சி செய்வோம் என்று முதல்வர் சொன்னார். அப்படி இருக்கையில் முதல்வரைச் சந்திக்க முகமூடி அணிந்து வாகனத்தில் சென்றது யார்? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் இதைவிட ஒரு தலைகுணிவு இந்த அவையில் எதுவும் கிடையாது. நிச்சயம் முதல்வர் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அரசு குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை என்று முதல்வர் சொல்லும் போது அதை அனைவரும் வரவேற்றார்கள்.
ஆனால் அவருடைய ராஜகுருவாக இருப்பவரை ரத்தன் பண்டிட் என்பவரை அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
உங்கள் ராஜகுருவாக இருந்தாலும் உங்கள் பர்சனலாக வைத்துக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் உங்களை நம்பி வாக்களித்திருக்கிறார்கள்.
இந்த இளைஞர்களுக்கு என்ன உதாரணத்தை சொல்கிறீர்கள்? என்ன வரலாற்றை சொல்ல விரும்புகிறீர்கள்? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b