Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று (13-05-26) காலை 9:30 மணியளவில் தொடங்கியது.
இந்த கூட்டத்தொடரின் போது, பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார்.
இந்த விவாதத்தின் போது, காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், எம்.எல்.ஏ காமராஜ் உள்ளிட்டவர்கள் தவெக அரசு ஆட்சியில் நீடிப்பதற்கு ஆதரவு அளிப்பதாகப் பேசினர்.
அதனை தொடர்ந்து சி.வி.சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளிக்கவில்லை.
மேலும், திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தன.
இதில் குறிப்பாக பிரேமலதா விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கூறி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்த விவாதத்தின் போது பேசிய முதல்வர் விஜய்,
நான் மொழிந்துள்ள அரசினர் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள், தங்களது கருத்துக்களை தெரிவித்து தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் உரையாற்றியுள்ளனர்.
உரையாற்றிய உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக உரையாற்றிய ராஜேஷ் குமார், தீர்மானத்தை வரவேற்றதோடு மட்டுமல்லாமல் மதசார்பற்ற அரசுக்கான ஆதரவு என கூறினார்கள். நிச்சயமாக இந்த அரசு மதசார்பற்ற அரசாகத்தான் செயல்படும் என்கிற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக உரையாற்றிய ஆர். செல்லசுவாமி இந்த தீர்மானத்தை வரவேற்று முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக உரையாற்றிய உறுப்பினர் வன்னி அரசு உரையாற்றுகையில்,
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று இந்த அரசு ஐந்து ஆண்டுகள் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தமைக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதரிப்பவர்களுக்கு மட்டுமான அரசல்ல, எதிர்ப்பவர்களுக்கான அரசும் இது என சுட்டிக்காட்டியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக உரையாற்றிய ஆ.மு ஷாஜகான் தீர்மானத்தை வரவேற்று வரலாற்று சாதனை இந்த அரசு படைக்கும் என வாழ்த்தியுள்ளார்.
உறுப்பினர் எஸ். காமராஜ் தீர்மானத்தை வரவேற்று உரையாற்றியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உரையாற்றிய ராமச்சந்திரன் தீர்மானத்தை வரவேற்று பேசியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக உரையாற்றிய உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றுகையில்,
எதிர்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்காமல் எங்கள் அரசு செயல்படுவது குறித்து குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தமைக்கு என்னுடைய நன்றி. மேலும் ஓரிரண்டு கருத்துக்களை தெரிவித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் அதைப்பற்றி மறுபரிசீலனை செய்வேன்.
தமிழ்நாட்டை ஆண்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த அரசுகள் இந்த நாட்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி தீட்டிய திட்டங்கள், சமூக நீதிக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், எங்கள் கட்சியின் கொள்கை தலைவர்களின் எண்ணங்கள் என இவற்றை மனதில் கொண்டு எங்களுடைய ஆட்சி நடைபெறும் என்கிற உறுதியை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சி சார்பாக பேசிய எம்.போஜராஜன் நடுநிலை வகிப்பதாக தெரிவித்து உரையாற்றியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக உரையாற்றிய சௌமியா அன்புமணி உரையாற்றுகையில்,
விவசாயிகள், இளைஞர்கள், மகளிர் நலன், மது ஒழிப்பு குறித்து செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து குறிப்பிட்ட தீர்மானத்தில் இருந்து விலகி நிற்பதாக தெரிவித்துள்ளார்.
மகளிர் பாதுகாப்பில் இருந்து தவர இந்த அரசு இம்மி அளவும் இடம் தராது. அடுத்து உரையாற்றிய மு. தமிமுன் அன்சாரி, கே. நித்தியானந்தன், எம்.எ.ஜவாஹிரூல்லா, எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஆகியோர் உரையாற்றுகையில் தீர்மானத்தை எதிர்த்து உரையாற்றியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் வெளிநடப்பு செய்துவிட்டார். எஸ்.பி.வேலுமணி தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றி உள்ளார்.
குதிரை பேரத்தில் எமது அரசு ஈடுபடுகிறது என்று கருத்தை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுகிற அரசே தவிர குதிரை பேரத்தில் ஈடுபடுகிற அரசு இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்த தலைவர்கள் வழிகாட்டிய கொள்கைகளில் இருந்து இம்மி அளவு விலகாமல் நிச்சயமாக இந்த ஆட்சி நடைபெறும். எனவே நான் மொழிந்துள்ள இத்தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அமர்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b