கோயம்பேடு பேருந்து நிலையத்தை மாலாக மாற்றக்கூடாது,66 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் -அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, 14 மே (ஹி.ச.) கோயம்பேடு பேருந்து நிலையத்தை மாலாக மாற்றக்கூடாது என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பயன்பாடு விரைவில் முடிவுக்கு வரவுள்ள நில
Anbumani


சென்னை, 14 மே (ஹி.ச.)

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மாலாக மாற்றக்கூடாது என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பயன்பாடு விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அங்கு வணிக மால் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர் நிலத்தில், நகர்ப்புற பசுமைப் பூங்கா, வணிக வளாகங்கள் மற்றும் பிரமாண்ட வணிக மால் அமைப்பது உள்ளிட்ட 3 திட்டங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் மால் மற்றும் வணிக வளாக திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை அரசு நிராகரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையம் காலியாகும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து அந்த இடத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி பிரமாண்ட மால் அமைக்க முந்தைய திமுக அரசு திட்டமிட்டதாகவும், அதற்கு எதிராக பா.ம.க. போராட்டங்களும் கையெழுத்து இயக்கங்களும் நடத்தியதாகவும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஒருவருக்கு கிடைக்கும் பசுமை நிலப்பரப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும், மொத்த நகரப்பரப்பில் வெறும் 6.7 சதவீதம் மட்டுமே பசுமை வெளி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 66 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பசுமைப் பூங்கா அமைப்பதே சரியான தீர்வாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பெரிய பூங்காக்கள் அமைந்துள்ள நிலையில், சென்னையில் அதற்கு இணையான பூங்காக்கள் இல்லாத குறையை இந்தத் திட்டம் தீர்க்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர், வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் குடும்பத்துடன் பொழுதுபோக்க பயன்பெறும் வகையில் கோயம்பேடு பகுதியை பசுமைப் பூங்காவாக மாற்ற வேண்டும் என்றும், வணிக மால் மற்றும் திரையரங்கு திட்டங்களை புதிய அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ