Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 14 மே (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் உதவித்தொகை திட்டத்தின் கீழ், பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
9-ஆம் வகுப்பு தேர்ச்சி/10-ஆம் வகுப்பு தோல்வி: மாதம் ₹200
10-ஆம் வகுப்பு தேர்ச்சி: மாதம் ₹300
12-ஆம் வகுப்பு தேர்ச்சி: மாதம் ₹400
பட்டதாரிகள்: மாதம் ₹600
இந்த உதவித்தொகை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுவதுடன், பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், மற்றவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ₹72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தவறாமல் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவர்களுக்கு இவ்வுதவித்தொகை பொருந்தாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் பயில்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிற அரசு அலுவலகங்கள் வாயிலாக உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்த மாற்றுத்திறனாளிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ்: மாதம் ₹600
12-ஆம் வகுப்பு தேர்ச்சி: மாதம் ₹750
பட்டதாரிகள்: மாதம் ₹1,000
ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் சுய உறுதிமொழி ஆவணத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும்.
புதிதாக விண்ணப்பிப்பவர்கள், அனைத்து கல்விச் சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் தூத்துக்குடி, கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும், அரசு வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது என்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b