Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 14 மே (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள குறும்பனை பாரைக்கல் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி மாயமான 14 வயது சிறுமி, மூன்று நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வெளிநாட்டில் நர்சாக பணியாற்றி வருகிறார். முருகன் தனது 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் சுருதிகா, 10 வயது மகன் மற்றும் உறவினருடன் செவ்வாய்க்கிழமை மாலை குளச்சல் அருகே உள்ள குறும்பனை பாரைக்கல் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அப்போது ஆபத்தான பாறைகள் நிறைந்த கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் நால்வரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் சுருதிகா கடலில் மாயமான நிலையில், மற்ற மூவர் எதிர் நீச்சல் போட்டு உயிர்தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற குளச்சல் கடல் காவல் நிலைய போலீஸார், மீனவர்கள் உதவியுடன் படகுகள் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்ற தேடுதல் பணியின் போது, நடுக்கடலில் இருந்து சிறுமி சுருதிகாவின் சடலம் மீட்கப்பட்டது.
சிறுமியின் உடலை கரைக்கு கொண்டு வந்த போது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து குளச்சல் கடல் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P