சட்ட விரோத மது விற்பனையை முறியடிக்க காவல் துறை அதிரடி உத்தரவு
சென்னை, 14 மே (ஹி.ச.) சட்டவிரோத மது விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே கள்ளச்சந்தையில் நடைபெறும் மது விற்பனையை தீவிரமாகக் கண்காணிக்குமாறு தமிழக காவல் துறை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மா
Police Issue Strict Orders to Crack Down on Illegal Liquor Sales


சென்னை, 14 மே (ஹி.ச.)

சட்டவிரோத மது விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே கள்ளச்சந்தையில் நடைபெறும் மது விற்பனையை தீவிரமாகக் கண்காணிக்குமாறு தமிழக காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும் நிலையில், அதிகாலை 5 மணி முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக கூலித் தொழிலாளர்களை குறிவைத்து அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், கலப்பட சாராயம் விற்பனை செய்யப்படும் அபாயமும் உள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் காலை ரோந்துப் பணிகளை முடுக்கிவிடவும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களை சோதனையிடவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், முன்னாள் குற்றவாளிகள் மற்றும் கள்ளச்சாராய வழக்குகளில் தொடர்புடையவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய சந்திப்புகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறுகையில்,

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது ஒரு நாள் நடவடிக்கை அல்ல, தொடர்ச்சியான கண்காணிப்பாக இருக்கும் என்றார்.

பொதுமக்களும் சட்டவிரோத மது விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு அழைத்தோ அல்லது காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்பியோ தெரிவிக்கலாம் எனவும், தகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b