Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மே (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவில், அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு 47 இடங்களை மட்டுமே வென்றது.
இதனால் அதிமுகவில் கடந்த சில தினங்களாக உட்கட்சி பிரச்சனை நீடித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி அணியில் அங்கம் வகித்து வரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் கோ.அரி, கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைமையின் உத்தரவின்படி,
அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்தும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் கோ.அரி நீக்கப்பட்டுள்ளார்.
திருத்தணி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கோ.அரி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 88,687 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியகுமாரை 6,116 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைத் தக்கவைத்தார்.
முன்னாள் அரக்கோணம் எம்.பி.யான கோ.அரி, கடந்த சில ஆண்டுகளாக திருத்தணி அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருந்தார். எஸ்.பி.வேலுமணி ஆதரவு அணியில் அவர் இருந்து வந்த நிலையில், தற்போது கட்சித் தலைமை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
திருத்தணி அதிமுகவில் கோ.அரி மற்றும் பி.எம்.நரசிம்மன் இடையே நீண்டகாலமாக உட்கட்சிப் பூசல் நிலவி வந்தது.
2021 தேர்தலின் போது நரசிம்மன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, கோ.அரியின் ஆதிக்கம் அதிகரித்தது.
இந்நிலையில் தற்போது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் தீர்மானம் கொண்டுவந்து பேசிய கோ.அரி, திருத்தணி மண்ணின் மைந்தனாக சமீபத்தில் கவனம் பெற்றிருந்தார்.
அதிமுகவின் தேர்தல் பிரச்சாரங்களிலும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், கோ.அரி தொடர்ந்து திருத்தணி சட்டமன்ற உறுப்பினராக நீடிக்கிறார்.
இந்த நடவடிக்கைக்கான காரணம் குறித்து கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
வரும் நாட்களில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுகவில் மாற்றங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b