ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் இன்று புதிய தேரின் வெள்ளோட்டம்
விருதுநகர், 14 மே (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலில் கொடி மரம் உள்ள மண்டபத்தின் மேற்பகுதியில் சிவனின் 24 திருவிளையாடல்களும் மூலிகை
ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் இன்று புதிய தேரின் வெள்ளோட்டம்


விருதுநகர், 14 மே (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும்.

இக்கோயிலில் கொடி மரம் உள்ள மண்டபத்தின் மேற்பகுதியில் சிவனின் 24 திருவிளையாடல்களும் மூலிகை சிற்பங்களாக வரையப்பட்டுள்ளது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.

இக்கோயிலில் மூலவர் வைத்தியநாத சுவாமியின் மீது புரட்டாசி 1-ம் நாள் மற்றும் பங்குனி 1-ம் நாளில் சூரிய ஒளி படும் அதிசயம் நிகழ்கிறது.

வைத்தியநாத சுவாமி கோயில் வைகாசி திருவிழா தேரோட்டத்தில் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என 5 தேர் இழுக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது தேரோட்டத்தில் சுவாமி, அம்பாள் ஆகிய இரு தேர்கள் மட்டுமே இழுக்கப்படுகிறது.

அந்த இரு தேர்களும் 200 ஆண்டு பழமை என்பதால் அவையும் சேதமடைந்தன. இதற்கு பதிலாக புதிய தேர் செய்ய அறநிலையத்துறை அனுமதி வழங்கியது.

உபயதாரர் நிதியில் ரூ.88.30 லட்சம் மதிப்பில் 24 அடி உயரம், 12 அடி அகலத்தில் புதிய தேர் செய்யும் பணி அன்மையில் நடைபெற்றது. தற்போது பணிகள் முடிந்த நிலையில் புதிய தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.

காலை 8 மணி தொடங்கிய தேர் வெள்ளோட்டம் 10.20 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புதிய தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதனிடையே, வைகாசி திருவிழாவில் மே 29-ம் தேதி நடைபெறும் தேரோட்டத்தில் புதிய தேரில் சுவாமியும், பழைய தேரில் அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருப்பதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b