Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 மே (ஹி.ச.)
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காவல்துறை ஆயுதப்படை தலைமையகத்தில் பணியாற்றும் டிஐஜி விஜயலட்சுமி மீது, அலுவலக இளநிலை உதவியாளரை செருப்பால் அடித்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
கடந்த 11-ம் தேதி, அலுவலக இளநிலை உதவியாளரான விக்னேஷ், கோப்புகளை டிஐஜி விஜயலட்சுமியின் மேசையில் வைத்தபோது, “கேட்காமல் எதற்காக வைத்தாய்?” என்று கூறி திட்டியதுடன், அவரை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ், தான் எந்த தவறும் செய்யவில்லை என அழுதபடி விளக்கம் அளித்தபோதும், டிஐஜி மீண்டும் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர் மன உளைச்சலுடன் அறையை விட்டு வெளியேறிய அவர், இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதுவரை டிஐஜி விஜயலட்சுமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட விக்னேஷ் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக ஆயுதப்படை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில், டிஐஜி விஜயலட்சுமியின் நடத்தை கடுமையாக கண்டிக்கப்பட்டதுடன், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பாதுகாப்பான பணிச் சூழலை உறுதி செய்யும் வகையில் டிஐஜியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், சம்பவத்திற்காக அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த தீர்மான நகல் முதலமைச்சர் தனிப்பிரிவு, டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ