Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச)
சென்னை இசிஆர் கடற்கரை பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை முழுமையாக அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் கூட்டுக்குழு அமைக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த குழுவில் சென்னை மாநகராட்சி ஆணையர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர், சென்னை துறைமுகப் பொறுப்பு கழகத் தலைவர், காசிமேடு மீன்பிடி துறைமுக மேலாளர் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.
காசிமேடு முதல் எண்ணூர் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் சமீப காலமாக பிளாஸ்டிக் குப்பைகள், தெர்மாகோல் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் தேங்கி குப்பைத் தீவுகளாக மாறியுள்ளதாக வெளியான செய்தியின் அடிப்படையில், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மீன்பிடித் தடைக்காலம் முடிவடையும் ஜூன் 14-ம் தேதிக்குள் அனைத்து குப்பை கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், கடற்கரைப் பகுதிகளில் தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க கூட்டுக்குழு செயல்பட வேண்டும் என்றும் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ