Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே ( ஹி.ச.)
தமிழகத்தின் வேளாண்மை மற்றும் நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநிலத்தின் நதிநீர் பங்கீடு, அணைகளின் நீர் இருப்பு நிலவரம், குறுவை-சம்பா சாகுபடிக்கான நீர் திறப்பு, மற்றும் அண்டை மாநிலங்களுடனான நீர் பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, தற்போது டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்று வரும் சூழலில், தமிழகத்தின் நிலைப்பாடு, மேட்டூர் அணையின் நீர்மட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கான நீர் தேவை குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், பருவமழை முன்னேற்பாடுகள், நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளின் முன்னேற்றம், மற்றும் விவசாயிகளுக்கான நீர் விநியோகத் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டிய அம்சங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b