Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சி பதவிகளை பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதிருப்தி அணியின் முக்கிய தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தங்களது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
கடந்த மே 13-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உட்பட 25 முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளை பறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், இபிஎஸ்-ன் உத்தரவை மீறி 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்ததே இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பறிக்கப்பட்ட பதவிகளில், எஸ்.பி. வேலுமணியின் தலைமை நிலையச் செயலாளர் பதவியும், சி.வி. சண்முகத்தின் அமைப்புச் செயலாளர் மற்றும் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பதவியும் அடங்கும்.
பறிக்கப்பட்ட பதவிகளுக்கு உடனடியாக 17 புதிய மாவட்டச் செயலாளர்களையும் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, சி.வி. சண்முகம் இல்லத்தில் எஸ்.பி. வேலுமணி, கே.சி. கருப்பண்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவு எம்எல்ஏ-க்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கட்சி பதவிகளை பறித்தது செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடுவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை கட்சி விதிகளுக்கு புறம்பானது என்பதை நிரூபிக்க ஆதாரங்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தற்போது இரண்டாக உடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் கொறடா உத்தரவு யாருக்கு செல்லுபடியாகும் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
சி.வி. சண்முகம் - வேலுமணி அணியில் 25 முதல் 38 எம்எல்ஏ-க்கள் வரை இருப்பதாக கூறப்படுகிறது. தவெக-வுக்கு ஆதரவளித்த எம்எல்ஏ-க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதை சட்டப்பேரவை தலைவர் மற்றும் நீதிமன்றத்தில் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், தவெக அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது, தனி அணியாக செயல்படுவது அல்லது தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சிக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b