வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 6 நாள் சுற்றுப்பயணம்
புதுடெல்லி, 15 மே (ஹி.ச.) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 6 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நா
Modi on a 6-Day Tour of Gulf and European Countries


புதுடெல்லி, 15 மே (ஹி.ச.)

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 6 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய இந்தப் பயணம், எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு எரிபொருள் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி இருப்பு தொடர்பான முக்கியமான ஒப்பந்தம் உட்பட இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.

இது இந்தியாவின் நீண்டகால எரிசக்தி தேவைக்கு உறுதிப்பாட்டை வழங்கும் என வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து, நெதர்லாந்தில் நீர் மேலாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பம், ஸ்வீடனில் பசுமை தொழில்நுட்பம் மற்றும் புதுமை, நார்வேயில் கடல்சார் தொழில்கள், இத்தாலியில் பாதுகாப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு நாட்டின் அரச தலைவர்கள் மற்றும் பிரதமர்களை சந்திக்கும் பிரதமர் மோடி, உலகளாவிய சவால்கள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.

மேலும், அந்தந்த நாடுகளில் உள்ள முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருடனும் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமரின் இந்த சுற்றுப்பயணம், 'மேக் இன் இந்தியா' மற்றும் 'எரிசக்தி தன்னிறைவு' ஆகிய இலக்குகளை வலுப்படுத்துவதோடு, சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மே 20-ம் தேதி பிரதமர் நாடு திரும்புவார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b