Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் தணிந்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிற்பகல் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.
சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்த மழையால், கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் பெய்த மழையை சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் அனுபவித்தனர்.
அதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர், கோலியனூர், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், வளவனூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.
விக்கிரவாண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை விவசாயப் பணிகளுக்கு சாதகமாக அமையும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைநகரான மயிலாடுதுறை மற்றும் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.
தரங்கம்பாடி பகுதியில் விட்டுவிட்டு தூறல் மழை நீடித்ததால், கடற்கரைப் பகுதிகள் ரம்மியமாக காட்சியளித்தன.
கோடை வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள், இந்த மழையால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளதால் இயல்பு வாழ்க்கைக்கு இதமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் இந்த மழை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b