அரசு ஊழியர்களில் முதற்கட்டமாக 50 சதவிகிதம் பேருக்கு வீட்டிலிருந்து வேலை - சிக்கிம் அரசு நடவடிக்கை
சிக்கிம், 15 மே (ஹி.ச.) மேற்காசிய நெருக்கடியைத் தொடர்ந்து பெட்ரோலிய நுகர்வைக் குறைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை அடுத்து, சிக்கிம் அரசு எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இவை மே 18, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.
அரசு ஊழியர்களில் முதற்கட்டமாக  50 சதவிகிதம் பேருக்கு வீட்டிலிருந்து வேலை - சிக்கிம் அரசு அறிமுகம்


சிக்கிம், 15 மே (ஹி.ச.)

மேற்காசிய நெருக்கடியைத் தொடர்ந்து பெட்ரோலிய நுகர்வைக் குறைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை அடுத்து, சிக்கிம் அரசு எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இவை மே 18, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.

இது தொடர்பாக உள்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு 50% குறைக்கப்படும்.

அரசு அலுவலகங்களுக்கு ஐந்து நாள் வேலை வாரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மேலும், சுழற்சி முறையில் 50% அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவார்கள்.

அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 30% குறைக்கப்படும்.

காவல்துறை மற்றும் அவசர சேவைகள் தவிர, அனைத்து துறைகளுக்கும் புதிய வாகனங்கள் வாங்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ அவசரம் தவிர அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஒற்றை-இரட்டை எண் வாகன விதி அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், வார இறுதி நாட்களில் அரசு வாகனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், அரசு சொத்துகளை திறமையாகப் பயன்படுத்துவதற்கும் இந்த இடைக்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரிகள் மெய்நிகர் கூட்டங்களுக்கும், பொதுப் போக்குவரத்துக்கும் முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், திரிபுரா அரசு மே 13, 2026 அன்று சிக்கன நடவடிக்கைகளை வெளியிட்டது.

அதன்படி, குரூப் C மற்றும் குரூப் D பணியாளர்களில் 50% பேர் மட்டுமே தினமும் அலுவலகம் வர வேண்டும் என்றும், மீதமுள்ளோர் வார சுழற்சி முறையில் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும் துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் வாரத்தில் பணியிடத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வீட்டிலிருந்து பணிபுரிவோர் தொலைபேசி மற்றும் மின்னணு தகவல் தொடர்பில் கிடைக்க வேண்டும் என்றும், அவசரப் பணிகளுக்கு நேரில் வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வந்து, மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b