Enter your Email Address to subscribe to our newsletters

காக்கிநாடா, 16 மே (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் காக்கிநாடா கொவ்வூர் பாலம் அருகே இன்று அதிகாலை வேலைக்குச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திரபேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரபாபு, விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது என்று உறுதிப்படுத்தினார்.
வேலைக்குச் செல்வதற்காக தொழிலாளர்கள் குழுவாக சாலையைக் கடக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் நான்கு பேர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு காக்கிநாடா அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரின் உடல்நிலையும் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்திரபேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிவேகம், கவனக்குறைவா அல்லது ஓட்டுநர் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதிகாலையில் தினக்கூலி வேலைக்காக புறப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களில் இந்த விபத்து பேரிடியாக விழுந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
Hindusthan Samachar / vidya.b