பழைய குற்றால அருவியில் குளிக்க ரூ.20 கட்டணம் வசூல் நிறுத்திவைப்பு
தென்காசி, 16 மே (ஹி.ச.) தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள பழைய குற்றால அருவியானது தற்போது வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ள நிலையில், பழைய குற்றால அருவியில் குளிக்க ரூ.20 கட்டணம் வசூல் செய்யப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு வ
Old Cuttralam Falls


தென்காசி, 16 மே (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள பழைய குற்றால அருவியானது தற்போது வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ள நிலையில், பழைய குற்றால அருவியில் குளிக்க ரூ.20 கட்டணம் வசூல் செய்யப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது தொடர்பாக பல கோரிக்கை மனுக்களும் மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில், ரூ.20 கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக இதுவரை எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், அடுத்த வாரத்தில் பொதுமக்களிடம் இது தொடர்பாக கருத்து கேட்ட பின்னரே பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனவும் தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது பழைய குற்றால அருவியில் இறுதி கட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தண்ணீர் குறைவாக உள்ளதால் குளிக்க அனுமதி வழங்கப்பட வில்லை எனவும், மழை பொழிந்து தண்ணீர் வரத்து அதிகரித்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN